16ம் நூற்றாண்டை சேர்ந்த பலகை கல்வெட்டு கண்டெடுப்பு


16ம் நூற்றாண்டை சேர்ந்த பலகை கல்வெட்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 12 Nov 2021 9:42 PM IST (Updated: 12 Nov 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

கீழ்நாத்தூர் கிராமத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த பலகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை

கீழ்நாத்தூர் கிராமத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த பலகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருகே கீழ்நாத்தூர் கிராமத்தில் வெளிப் புறவழிச்சாலை அருகில் பலகைக் கல்வெட்டை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், கூடலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் நெடுஞ்செழியன், பழனிச்சாமி, மதன்மோகன், ஸ்ரீதர், பன்னீர்செல்வம் ஆகியோரால் கூட்டாக கண்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது இது 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பலகை கல்வெட்டு என்பது தெரியவந்தது. 

திருவண்ணாமலையில் மேலைத்தெருவில் இருந்த தேவரடியார்கள் தங்களுக்கு கரிகால சோழன் பெயரில் ஜீவிதமாக விடப்பட்ட கரிகால சோழநல்லூர் ஊரில் கும்பனேரி என்ற பிரிவு முழுவதையும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணித் தம்பிரானாக இருந்த அதாவது திருப்பணி மேற்கொள்ளும் பொறுப்பில் இருந்த உலகநாத தம்பிரானுக்கு அபிஷேக கட்டளைக்கு கொடுத்து உள்ளனர் என்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுவதாக அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் விஜயநகர ஆட்சிக் காலத்தில் திருவண்ணாமலை கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு தங்கள் உபயமாக அவர்களுக்கு உண்டான ஊரையே கோவிலுக்கு தானமாக வழங்கிய சிறப்பான கல்வெட்டாக இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். 

இந்த கல்வெட்டு உள்ள இடத்திற்கு அருகில் கீழ்நாத்தூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியே கல்வெட்டில் குறிப்பிடும் கும்பனேரி ஆகலாம். 

மேலும் ஏந்தல் கல்வெட்டிலும், திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகளிலும் கரிகால சோழநல்லூர் என்று குறிப்பிட்ட இடம் தற்போதைய கீழ்நாத்தூர் ஏரியை ஒட்டிய இடமாக இருக்கலாம் என்று அதனை உறுதிசெய்யும் விதம் இக்கல்வெட்டு அமைந்துள்ளது என்றனர்.

Next Story