வருசநாடு அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது


வருசநாடு அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2021 9:53 PM IST (Updated: 12 Nov 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடமலைக்குண்டு:
வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறையை சேர்ந்தவர் வனம். விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 வயது வாலிபர் ஒருவர் வனத்தை சந்தித்தார். அப்போது அவர் தன்னை அனாதை என்றும், திருச்சி மாவட்டம் மணப்பாறை தனது சொந்த ஊர் என்றும் கூறினார். இதையடுத்து அவர் மீது இரக்கப்பட்ட வனம், தனது வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை பராமரிக்கும் வேலைக்கு சேர்த்துக்கொண்டார். 
இதற்கிடையே கடந்த 6-ந்தேதி காலை வனம் மற்றும் அவரது குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்றுவிட்டனர். இதனால் அந்த வாலிபர் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் மாலையில் வனம் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு வாலிபரையும், அங்கிருந்த வனத்தின் மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. மேலும் வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை, ரூ.17 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. அப்போது தான் அந்த வாலிபர் நகை, பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதுகுறித்து வருசநாடு போலீஸ் நிலையத்தில் வனம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை தேடி வந்தனர். 
இந்தநிலையில் வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் முருக்கோடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முருக்கோடை மூலவைகை ஆற்று பாலத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் வனத்தின் வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது ஏற்கனவே திருச்சி, மதுரை மாவட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story