மழை வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது
விழுப்புரம் அருகே மழை வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே அருளவாடியில் இருந்து பையூருக்கு செல்லும் வழியில் தரைப்பாலம் உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் இந்த தரைப்பாலம் மூழ்கியுள்ளது. அந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி 4 அடி உயரத்திற்கும் மேலாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் அவ்வழியாக வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது.
குறிப்பாக நத்தமேடு, கல்பட்டு, அருளவாடி, ஒட்டன்காடுவெட்டி, நாதன்காடுவெட்டி, சென்னகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக திருவெண்ணெய்நல்லூருக்கு செல்ல பிரதான சாலையாக உள்ள இந்த தரைப்பாலத்தில் தற்போது பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்கண்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும் மற்றும் வேலைக்கு செல்லவும் சுமார் 15 முதல் 20 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு விழுப்புரம் வந்து செல்கின்றனர். ஒரு சிலர் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடந்தும் சென்று வருகின்றனர். இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் அதிகளவில் செல்வதால் பாதுகாப்பு கருதி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story