நீர்வரத்து வாய்க்காலில் தேங்கி நிற்கும் எண்ணெய் படலம் விளை நிலங்கள் பாதிக்கும் அபாயம்


நீர்வரத்து வாய்க்காலில் தேங்கி நிற்கும் எண்ணெய் படலம் விளை நிலங்கள் பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 12 Nov 2021 10:49 PM IST (Updated: 12 Nov 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி பகுதி விவசாயிகள் கவலை

ராமநத்தம், 

திட்டக்குடி அருகே உள்ள பெரங்கியம் கிராமத்தில் இருந்து அரங்கூர் கிராம விவசாய விளைநிலங்கள் வழியாக வாகையூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கடந்த 2 நாட்களாக எண்ணெய் படலமாக மிதக்கிறது. இதனால் திட்டக்குடி பகுதிக்குட்பட்ட பெரங்கியம், அரங்கூர் கிராமங்களில் நீர்வரத்து வாய்க்காலையொட்டி உள்ள விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெரங்கியம் கிராம விவசாயிகள் கூறுகையில், சென்னையில் இருந்து பெரங்கியம் கிராமம் வழியாக மதுரை வரை இந்தியன் ஆயில் நிறுவனம் குழாய் பதித்து, அதன் வழியாக கச்சா எண்ணையை கொண்டு செல்கிறார்கள். ஒரு வேளை கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு, அதில் இருந்து வெளியேறும் எண்ணெய் நீர்வரத்து வாய்க்காலில் தேங்கிய நீரில் கலந்து மிதக்கிறதா? என எங்களுக்கு அச்சமாக உள்ளது. ஆகவே நீர்வரத்து வாய்க்காலில் தேங்கி நிற்கும் எண்ணெய் படலத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளின் அச்சத்தை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story