விழுப்புரம் கோர்ட்டில் 2 வது நாளாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சாட்சியம்


விழுப்புரம் கோர்ட்டில் 2 வது நாளாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சாட்சியம்
x
தினத்தந்தி 12 Nov 2021 10:59 PM IST (Updated: 12 Nov 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

சிறப்பு டி.ஜி.பி. மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2-வது நாளாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதன் வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம், 

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரிடம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சாட்சிகள் விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது. 
இவ்வழக்கில் மொத்தம் 127 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் முதல் சாட்சியும், புகார்தாரருமான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நேரில் ஆஜராகி 5 மணி நேரம் சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியம் நிறைவடையாத நிலையில் நீதிமன்ற நேரம் முடிந்து விட்டதாலும், அவர் மேலும் சாட்சியம் அளிக்க வேண்டியுள்ளதாலும் மறுநாள் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

குறுக்கு விசாரணை

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி இருவரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதி கோபிநாதன் ஏற்றுக்கொண்டார்.
மேலும் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி, இவ்வழக்கிற்கு தேவையான சாட்சிகளான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் கணவரான அருணாச்சல பிரதேசத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வருபவர் மற்றும் திருச்சி சரக போலீஸ் ஐ.ஜி., கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, உள்துறை செயலாளர் ஆகியோரிடம் விசாரணை முடிந்த பின்னரே, பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாதன், இந்த மனு மீது அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

2-வது நாளாக சாட்சியம்

இதனை தொடர்ந்து சாட்சிகள் விசாரணை நடந்தது. இதற்காக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனது கணவருடன் 2-வது நாளாக விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் சாட்சியம் அளித்தார். அவர் அளித்த சாட்சியம் முழுவதையும் நீதிபதி பதிவு செய்துகொண்டார். 2 நாட்கள் 8 மணி நேரத்திற்கும் மேலாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த சாட்சியம் நேற்று மாலை நிறைவடைந்தது.
இதையடுத்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். 
இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்கி முக்கிய சாட்சியான புகார்தாரரின் சாட்சியம் நிறைவடைந்ததையடுத்து மற்ற சாட்சிகளிடம் விரைவாக விசாரித்து முடிக்க ஏதுவாக அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story