மோகனூர் அருகே சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம்


மோகனூர் அருகே சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2021 11:49 PM IST (Updated: 12 Nov 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்கக்கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோகனூர்:
சேறும், சகதியுமான சாலை
மோகனூர் அருகே மணப்பள்ளி ஊராட்சியில் குன்னிபாளையம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மணல் குவாரி செயல்பட்டது. இந்த குவாரிக்கு லாரி உள்ளிட்ட வாகனங்கள் குன்னிபாளையம் வழியாக சென்று வந்தன. இதனால் குன்னிபாளையம் சாலை சேதமடைந்தது.
குண்டும் குழியுமாக காணப்பட்ட இந்த சாலை தற்போது, கற்கள் பெயர்ந்து மண்சாலையாக மாறிவிட்டது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நாற்று நடும் போராட்டம்
சமீபத்தில் பெய்த மழை காரணமாக குன்னிபாளையம் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் வழுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கோவில் முன்பு சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் அவர்கள் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த திடீர் போராட்டத்தால் குன்னிபாளையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story