மழையால் பாதித்த நெற்பயிர்களை கலெக்டர் பார்வையிட்டார்


மழையால் பாதித்த நெற்பயிர்களை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 12 Nov 2021 11:53 PM IST (Updated: 12 Nov 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகாவில் மழையால் பாதித்த நெற்பயிர்களை கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் பார்ைவயிட்டார்.

தொண்டி, 

திருவாடானை தாலுகாவில் மழையால் பாதித்த நெற்பயிர்களை கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் பார்ைவயிட்டார்.

மழையால் நெற்பயிர் சேதம்

திருவாடானை தாலுகாவில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் நெல் பயிரிடப்பட்டு உள்ள வயல்களில் தண்ணீர் சூழ்ந்து நெற்பயிர்கள் அழுகி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல இடங்களில் சாலை போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்திற்கு மேல் மழைநீர் வெள்ளமாக சென்று கொண்டு இருக்கிறது.
 இதனை மாவட்ட கலெக்டர் சங்கர்லால்குமாவத் நேரில் பார்வையிட்டார். அப்போது வயல்வெளிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள டி.கிளியூர், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, கோடனூர் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். 
அப்போது தற்காலிக வடிகால் அமைத்து வயலில் தேங்கியுள்ள மழை நீரை அருகே உள்ள கண்மாய் மற்றும் ஊருணிகளில் சேமித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.மேலும் பழங்குளம் ஊராட்சி மாணிக்கங்கோட்டை, திருவாடானை அருகே உள்ள கல்லூர் ஊராட்சி பகுதிகளில் சாலை தரை பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதை கலெக்டர் நேரில் பார்த்தார்.

கண்காணிக்க உத்தரவு

 அப்போது தரை பாலத்தின் அருகே எச்சரிக்கை விழிப்புணர்வு பதாகை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். திருவாடானை தாலுகாவில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஓரியூர் கண்மாய் மற்றும் என்.மங்கலம் கண்மாய்களையும் பார்த்தார்.
தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகளின் கொள்ளளவை தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என அவர் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது கன மழை காரணமாக சேதமடைந்த வீடுகள் மற்றும் மங்கலக்குடி அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதையும் பார்வையிட்டார். 
திருவாடானை ஊராட்சியில் மழையினால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளருக்கு மாவட்ட கலெக்டர் நிவாரண பொருட்களை வழங்கினார். நம்புதாளை புயல் காப்பகம் மற்றும் அரசு பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார். அவருடன் தாசில்தார் செந்தில் வேல்முருகன், யூனியன் தலைவர் முகமது முக்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள், ஊராட்சி தலைவர்கள் கடம்பாகுடி கணேசன், அப்துல்ஹக்கீம், ஆலம்பாடி காந்தி, இலக்கியா ராமு.நிரோசா கோகுல், பார்த்திபன், ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்துராக்கு உட்பட அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.

Next Story