`தினத்தந்தி' செய்தி எதிரொலி: பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை சூழ்ந்த மழைநீர் அகற்றம்
`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை சூழ்ந்த மழைவெள்ளம் அகற்றப்பட்டது.
நெல்லை:
`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை சூழ்ந்த மழைவெள்ளம் அகற்றப்பட்டது.
மழை வெள்ளம்
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. நெல்லை கலெக்டர் அலுவலகம், மேம்பாலம் கீழ்பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது.
பாளையங்கோட்டையில் உள்ள அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியான மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வளாகத்திலும் மழைவெள்ளம் தேங்கியது. இதனால் அங்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் தண்ணீர் வடியாமல் கிடந்ததால் பச்சை நிறத்தில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை உருவானது. மேலும் டெங்கு கொசு உற்பத்தி ஆகும் சூழ்நிலை நிலவியது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.
அகற்றப்பட்டது
இந்த நிலையில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை சூழ்ந்து மழை வெள்ளம் தேங்கிக்கிடப்பது குறித்து `தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இந்த செய்தி எதிரொலியாக ஆஸ்பத்திரி டாக்டர்கள் விரைந்து வந்து பார்த்து உடனே அந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து மோட்டார் மூலம் ஆஸ்பத்திரி முன்பு தேங்கி கிடந்த மழை நீரை அகற்றினார்கள்.
பின்னர் சுகாதாரப்பணியாளர்கள் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். இந்த நிலையில் மீண்டும் நேற்று பெய்த மழையில் மதியம் தண்ணீர் தேங்கியது. உடனே ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைந்து வந்து மழைநீரை அகற்றினார்கள்.
`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மழைநீரை அகற்றிய மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன், டாக்டர்கள் ராமசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு பொதுமக்களும், நோயாளிகளும் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story