பெண் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
நரிக்குடி அருகே பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காதல் திருமணம்
நரிக்குடி அருகே உள்ள புதயனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் மகன் முத்துராஜா (வயது 28) என்பவரும், உச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்த அழகுமலை மகள் மகாதேவி (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் புதயனேந்தல் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு தர்ஷனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மகாதேவி விஷம் குடித்து ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனே மகாதேவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாலை மறியல்
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரது உடல் திருச்சுழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மகாதேவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அழகுமலை மற்றும் அவரது உறவினர்கள் திருச்சுழி பஸ் நிலையம் அருகே மகாதேவியின் உடலை வாங்க மறுத்தும், சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த திருச்சுழி துணைபோலீஸ் சூப்பிரண்டு மதியழகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விைரந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story