பெங்களூருவில் ரூ.1 கோடி யானை பாதம், பழங்கால பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது
பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான யானை பாதம், பழங்கால பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
கிடுக்கிப்பிடி விசாரணை
பெங்களூரு கே.ஜி.ஹள்ளி போலீசார், தங்களது எல்லைக்கு உட்பட்ட எச்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகப்படும்படியாக சுற்றுவதாகவும், அவரது கையில் பெரிய சாக்கு பை வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.
அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர் கையில் வைத்திருந்த சாக்கு பையை போலீசார் பார்த்த போது அதில் 200 ஆண்டுகள் பழமையான யானையின் பாதம், யானை காலில் அணியும் ஷூவை கழற்ற பயன்படுத்தப்படும் கருவி மற்றும் பழங்கால பொருட்கள் இருந்தன. இதுகுறித்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
ரூ.1 கோடி பொருட்கள் பறிமுதல்
விசாரணையில் அந்த வாலிபர் எலகங்கா அருகே கட்டிகானஹள்ளியை சேர்ந்த ஆர்யன்கான்(வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் இவர் யானையின் பாதம், யானை காலில் அணியும் ஷூவை கழற்ற பயன்படுத்தப்படும் கருவி, தாமிரத்தால் செய்யப்பட்ட தட்டுகள், செம்புகள் உள்ளிட்ட பழங்கால வெளிநாட்டு பொருட்களை விற்க முயற்சி செய்ததும் தெரிந்தது. இதனால் அவரை கைது செய்த போலீசார் ரூ.1 கோடி மதிப்பிலான யானை பாதம், பழங்கால பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேற்கொண்டு ஆர்யன்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது அண்ணன் மகனின் மருத்துவ செலவுக்காக அதிக அளவில் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை அடைக்க தனது வீட்டில் பொக்கிஷம் போல பாதுகாத்து வந்த பழங்கால யானையின் பாதம், பழங்கால பொருட்களை விற்க முயன்றதாகவும் ஆர்யன்கான் தெரிவித்து இருந்தார். கைதான ஆர்யன்கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story