பெண் கற்பழித்து கொலை - வாலிபர் கைது
சிக்பள்ளாப்பூரில் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிக்பள்ளாப்பூர்:
கற்பழித்து கொலை
சிக்பள்ளாப்பூர் டவுனில் உள்ள நகரசபை அலுவலகம் அருகே இறைச்சி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிக்பள்ளாப்பூரில் டவுனில் சுற்றித்திரிந்த ஒரு பெண் இரவு நேரத்தில் அந்த மார்க்கெட்டில் வந்து தூங்குவது வழக்கம். அதுபோல நேற்று முன்தினம் இரவு அந்த பெண் மார்க்கெட்டில் உள்ள கடையின் முன்பு தூங்கி கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் பெண்ணை கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதில் அந்த பெண் மயங்கி விழுந்தார். பின்னர் அந்த பெண்ணை, வாலிபர் கற்பழித்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த பெண் கண்விழித்தார். ஆனால் பெண்ணை உயிருடன் விட்டால் தன்னை போலீசில் காட்டி கொடுத்து விடுவார் என்று பயந்த வாலிபர் பெண்ணின் தலையை தரையில் முட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வாலிபர் கைது-பரபரப்பு
இந்த நிலையில் நேற்று காலை மார்க்கெட்டுக்கு வந்தவர்கள், பெண் இறந்து கிடப்பது குறித்து சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த சிக்பள்ளாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மார்க்கெட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது பெண்ணை, வாலிபர் கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அப்துல்(வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அந்த பெண் யார்? எநதப்பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story