வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை அகற்றகோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கொருக்குப்பேட்டை பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை அகற்றகோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
சென்னை கொருக்குப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர், ஹரி நாராயணபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதுடன், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் இரவு நேரங்களில் மழைநீர் வழியாக பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுத்து விடுவதால் குழந்தைகளை வைத்துக்கொண்டு அச்சத்துடன் பரிதவித்து வருகிறார்கள்.
ஆனால் இதுபற்றி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என புகார் தெரிவித்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், தங்கள் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை அகற்றி, மீண்டும் மின்சாரம் வழங்க கோரி நேற்று கொருக்குப்பேட்டை சி.பி.சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. எபினேசர் சம்பவ இடத்துக்கு வந்தார்.
அப்போது பொதுமக்கள், எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு மழைநீரை அகற்ற கோரிக்கை வைத்தனர். உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story