மணலி புதுநகரில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - வீடுகளில் சிக்கி தவித்த 160 பேர் ரப்பர் படகு மூலம் மீட்பு


மணலி புதுநகரில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - வீடுகளில் சிக்கி தவித்த 160 பேர் ரப்பர் படகு மூலம் மீட்பு
x
தினத்தந்தி 13 Nov 2021 10:55 AM IST (Updated: 13 Nov 2021 10:55 AM IST)
t-max-icont-min-icon

மணலி புதுநகரில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்த 160-க்கும் மேற்பட்டவர்களை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.

திருவொற்றியூர்,

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. பூண்டி ஏரியில் இருந்து 18 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மணலி புதுநகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் எதிரே உள்ள லட்சுமி நகர், அய்யப்பன் நகர், வடிவுடையம்மன் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளை முட்டு அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள்.

இவ்வாறு வீடுகளில் சிக்கித்தவித்த 50-க்கும் மேற்பட்டவர்களை மணலி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் மீட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் மாநகராட்சி சார்பில் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

அதேபோன்று மணலி கலைஞர் நகரில் வீடுகளில் சிக்கி தவித்த 80 பேரையும், சின்ன மாத்தூர் பகுதியில் 30 பேரையும் மீட்டு அரசு பள்ளியில் தங்க வைத்தனர். தனியார் படகுகள் மூலமும் மணலி புதுநகர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

புழல் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் புழல் ஏரி உபரிநீர் கால்வாய் வழியாக வரும் தண்ணீர் வடபெரும்பாக்கம் கொசப்பூர், ஆமுல்லைவாயில், சடையங்குப்பம், பர்மா நகர் வழியாக சென்று எண்ணூர் முகத்துவாரம் அருகே கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் சடையங்குப்பம் மற்றும் பர்மா நகர் பகுதிகள் முற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. அதேபோன்று சந்திப்பு பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மணலி செல்பவர்கள் சி.பி.சி.எல். கம்பெனி வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் மணலி புதுநகர், மீஞ்சூர், மாதவரம் செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தது. இதில் 35-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் முழுவதும் சேதம் அடைந்தது.

மேலும் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சிறிதளவு சேதம் அடைந்ததாகவும், கட்டுமரங்களும், பைபர் படகுகளும் சேதம் அடைந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Next Story