கிருஷ்ணாபுரம் அணை 9-வது முறை திறப்பு - 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
கிருஷ்ணாபுரம் அணை 9-வது முறையாக திறக்கப்பட்டு 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பள்ளிப்பட்டு,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார்வேட்டி நகரம் மண்டலம் அம்மபள்ளி கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கடந்த 9-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணை நிரம்பியது. இதையடுத்து ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முடிவு செய்தனர். இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா ஆலோசனைப்படி வருவாய்துறை கிராம நிர்வாக அலுவலர்கள் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
கிராம மக்கள் ஆற்றில் உள்ள தரைப்பாலங்களை கடக்க வேண்டாம் என்று தண்டோரா மூலம் எச்சரித்தனர். மேலும் இந்த ஆற்றில் உள்ள தரைப்பாலங்களின் இருபுறமும் வருவாய்த்துறையினரும், போலீசாரும் யாரும் இறங்காத படி கண்காணித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கிருஷ்ணாபுரம் அணையின் இரு கதவுகள் திறக்கப்பட்டு 9-வது முறையாக 1,200 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நேற்று நண்பகல் 12 மணியளவில் நிறுத்தப்பட்டது. இதுவரை கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் 5 மணி நேரம் மட்டுமே திறந்துவிடப்படும். ஆனால் முதல் முறையாக 1,200 கன அடி தண்ணீர் 14 மணி நேரம் தொடர்ச்சியாக திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் குறையாமல் 14 மணி நேரம் தொடர்ச்சியாக ஓடி மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 9-வது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள கீழ்கால்பட்டடை, சாமந்த வாடா, நெடியம், சொரக்காய் பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இந்த தரைப்பாலங்களுக்கு மேல் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் பாய்ந்தது. அதேபோல் திருத்தணி ஒன்றியத்தை சேர்ந்த நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, அருங்குளம், ஆற்காடு குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களும் தண்ணீரில் மூழ்கின. இந்த தண்ணீர் பூண்டி ஏரியில் சென்று கலக்கிறது.
Related Tags :
Next Story