செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பை சூழ்ந்த மழை வெள்ளம்
கனமழை காரணமாக செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சோழிங்கநல்லூர்,
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் 15-வது மண்டலம், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை முதல் இந்த பகுதியை தண்ணீர் சூழ ஆரம்பித்து பகுதி முழுவதும் நீர் சூழ்ந்த பகுதியாக காட்சியளிக்கிறது. இங்கு வசிக்கக்கூடிய மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் சாலை முழுவதும் சுமார் 2 அடிக்கும் மேல் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில் நடந்து சென்று வாங்கும் நிலை உள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த இப்பகுதியை ஐ.ஏ.எஸ். அதிகாரி வீரராகவ் பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டார். கடந்த ஒரு சில நாட்களாக பெய்த கனமழையால் பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு செல்லும் நுக்கம்பாளையம் பிரதான சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலையில் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
செம்மஞ்சேரி ஜவஹர் நகர், ஏழில்முக நகர் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஓஎம்ஆர் சாலையிலிருந்து அந்த பகுதிக்கு செல்லக்கூடிய சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் வீட்டை விட்டு மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
Related Tags :
Next Story