காட்டு யானைகளை விரட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
காட்டு யானைகளை விரட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கூடலூர்
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம் அடைந்தார். இதைதொடர்ந்து காட்டு யானைகளை விரட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெண் படுகாயம்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பாடந்தொரை பகுதியில் குட்டியுடன் கூடிய 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதை விரட்டுவதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாடந்தொரை அருகே குருத்துகுளி பகுதியை சேர்ந்த மகேஸ்வரி (வயது 54) என்பவர் தனது வீட்டின் பின்பக்கமாக வெளியே வந்தார்.
அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த காட்டுயானை மகேஸ்வரியை தும்பிக்கையால் தாக்கியது. இதில் அலறியடித்தபடி அவர் கீழே விழுந்தார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சத்தம் போட்டு காட்டு யானையை விரட்டினர். பின்னர் இடுப்புப் பகுதியில் பலத்த காயமடைந்த மகேஸ்வரியை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று அதிகாலை கர்க்கப்பாலி பகுதியை சேர்ந்த தாமஸ் என்பவரது விவசாய நிலத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. பின்னர் அங்கு பயிரிட்டு வந்த மரவள்ளிக்கிழங்குகளை மிதித்து சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டித்து பாடந்தொரை பகுதியில் நேற்று காலை 9 மணிக்கு பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அப்போது காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து காட்டு யானைகளை விரட்டக்கோரி கூடலூர்- சுல்தான்பத்தேரி சாலையில் 9.30 மணிக்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தேவர்சோலை போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வன அலுவலர் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
வன அலுவலர் உறுதி
இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கும்கி யானைகள் கொண்டு வந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராத வகையில் விரட்டியடிப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று பகல் 11.30 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதை தொடர்ந்து 2 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story