மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி: ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப் பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனதையொட்டி நேற்று ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப் பெயர்ச்சி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்:-
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனதையொட்டி நேற்று ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப் பெயர்ச்சி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குடி குருபகவான் கோவில்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு உரிய கோவிலாக இக்கோவில் விளங்குகிறது. தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் இக்கோவில் 98-வது தலமாகும்.
தேவர்களை ஆபத்தில் இருந்து காத்து அருள்புரிந்ததால் இக்கோவிலில் அருள்பாலித்து வரும் சிவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது. அதேபோல அசுரர்களால் தேவர்களுக்கு நேர்ந்த துயரங்களை போக்கியதால் இக்கோவில் விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என்று பெயர்.
இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தி ஆவார். விஸ்வாமித்திரர், அகத்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், ஆதிசங்கரர் உள்ளிட்டோர் வழிபட்ட தலமாகவும் இக்கோவில் உள்ளது.
குருப்பெயர்ச்சி விழா
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை 6.21 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை குரு பரிகார யாகம் நடந்தது. நேற்று அதிகாலையிலும் யாக பூைஜகள் நடந்தன. யாக பூஜைகளை தொடர்ந்து கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
தங்க கவச அலங்காரம்
குருபகவான் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவர் தெட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 6.31 மணிக்கு குருப்பெயர்ச்சியின் போது மூலவர் குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. குருப்பெயர்ச்சி விழா யாக பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் ரமேஷ்சுவாமிநாத சிவாச்சாரியார், ஞானஸ்கந்த சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர்.
குருப்பெயர்ச்சி விழாவில் காமராஜ் எம்.எல்.ஏ., இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், தெட்சிணாமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் கிழக்கு கோபுர வாசலிலும், குருபகவான் சன்னதியிலும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டபோது தள்ளு, முள்ளு நடந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஹரிஹரன், தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
விழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் வலங்கைமான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story