தேனி மாவட்டத்தில் 403 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்


தேனி மாவட்டத்தில் 403 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 13 Nov 2021 10:05 PM IST (Updated: 13 Nov 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 403 இடங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேனி:
தேனி மாவட்டத்தில் 403 இடங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 
சிறப்பு முகாம்
தேனி மாவட்டத்தில் 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் இதுவரை 7 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதுவரை மாவட்டத்தில் 9 லட்சத்து 95 ஆயிரத்து 718 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 6 லட்சத்து 50 ஆயிரத்து 190 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 3 லட்சத்து 45 ஆயிரத்து 528 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.
1.13 லட்சம் இலக்கு
இதன் தொடர்ச்சியாக 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று மாவட்டத்தில் 403 இடங்களில் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடக்கிறது. வட்டாரம் வாரியாக ஆண்டிப்பட்டியில் 63 இடங்களிலும், போடியில் 60 இடங்களிலும், கம்பத்தில் 45 இடங்களிலும், கடமலை-மயிலையில் 27 இடங்களிலும், பெரியகுளத்தில் 74 இடங்களிலும், தேனியில் 52 இடங்களிலும், உத்தமபாளையத்தில் 38 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
இந்த முகாம்கள் மூலம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள், முகாம்கள் நடக்கும் இடங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதில், கோவிஷீல்டு 55 ஆயிரம் டோஸ், கோவேக்சின் 58 ஆயிரத்து 500 டோஸ் செலுத்தப்பட உள்ளது. 
எனவே, தேனி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தி தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்து அரசு மேற்கொண்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story