டிராக்டரில் சென்று பயிர்களை பார்வையிட்ட அண்ணாமலை
மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை டிராக்டரில் சென்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.
பரங்கிப்பேட்டை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் 2 வாரங்களாக கன மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன.
அதன்படி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பூவாலை பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சில இடங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
டிராக்டர் ஓட்டிய அண்ணாமலை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பரங்கிப்பேட்டை அருகே பெரியப்பட்டு மெயின்ரோடு வழியாக வந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை கிராமத்திற்கு சென்ற அண்ணாமலை, டிராக்டரில் ஏறி, அதனை அவரே ஓட்டிச்சென்று மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மழைவெள்ளத்தில் மூழ்கிய விளைநிலத்தில் அவர் இறங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டார்.
அப்போது கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் இளஞ்செழியன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலா் உடனிருந்தனர்.
பேரிடர் மாவட்டமாக...
பின்னர் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், என்.எல்.சி. நிதி மூலம் பரவனாற்றை தூர்வாரவும், அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காரில் இருந்தபடியே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டால், உண்மை நிலவரம் தெரியாது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் கலந்துரையாடி, பார்வையிட வேண்டும். கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
Related Tags :
Next Story