தொடர் கனமழையால் 161 ஏரிகள் நிரம்பின


தொடர் கனமழையால் 161 ஏரிகள் நிரம்பின
x
தினத்தந்தி 13 Nov 2021 10:49 PM IST (Updated: 13 Nov 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 161 ஏரிகள் நிரம்பின. மேலும் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

விருத்தாசலம், 

தென்மேற்கு பருவமழை காலத்தில் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பாவிட்டாலும், நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்தது.
இந்த மழையால் ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பல இடங்களில் விளை நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த மழைநீர் இன்னும் வடியாததால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

மேலும் தொடர் மழையால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 44 ஆயிரத்து 872 கனஅடி தண்ணீரும், வெள்ளாற்றில் வினாடிக்கு 7,556 கனஅடியும், மேல் பரவனாற்றில் வினாடிக்கு 1,096 கனஅடி தண்ணீரும், கீழ்பரவனாற்றில் வினாடிக்கு 2,435 கனஅடியும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கடலூர் நகரில் செல்லக்கூடிய தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 7,523 கனஅடியும், கெடிலம் ஆற்றில் வினாடிக்கு 4,048 கனஅடி தண்ணீரும் கரைபுரண்டு ஓடுகிறது.மேலும் இந்த ஆறுகளில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள், அணைகள் உள்ளிட்டவை வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக மாவட்டத்தில் உள்ள 228 ஏரிகளில் நேற்று வரை 161 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

அனைத்து ஏரிகளும்...

மேலும் 32 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 18 நீர்நிலைகளில் 51 முதல் 75 சதவீதமும், 15 ஏரியில் 26 முதல் 50 சதவீதமும், 2 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் தண்ணீர் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சிறிது நாட்களிலேயே 161 ஏரிகள் நிரம்பி உள்ளதால், பருவமழை காலம் முடிவதற்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story