அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை, செல்போன்கள் திருட்டு


அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை, செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 14 Nov 2021 12:13 AM IST (Updated: 14 Nov 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நகைகள், செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நகைகள், செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

நகை திருட்டு

பேரணாம்பட்டு டவுன் காமராஜர் நகரைச் சேர்ந்த  சதாசிவம் என்பவரின் மனைவி சுந்தரி (வயது 53). இவர் அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு ஆம்பூர் அருகே கன்னடி குப்பம் கிராமத்திலுள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றார். 

சுந்தரியின் வீடு பூட்டி கிடப்பதையறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகையை திருடி சென்றுள்ளனர்.

இன்று காலை சுந்தரி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. பீரோவில் சேலைகளுக்கு இடையில் மறைத்து வைத்திந்த 5 பவுன் சங்கிலி தப்பியது.

மேலும் இதே பகுதியில் வசிக்கும் அமுதா (55) என்பவர் குடியாத்தம் அருகே உள்ள ராமாலை கிராமத்தில் வசிக்கும் தனது மகளை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார். அவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 3 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

அதேபோல் அருகில் உள்ள பாத்திமா என்பவர் வீட்டை பூட்டி விட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்த போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த 3 செல்போன்கள், 2 பட்டுசேலைகளை திருடி சென்றது தெரிய வந்தது. 

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சபாரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூர் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் பார்வையிட்டு கைரேகைகளை சேகரித்தார். 

தொடர் திருட்டு

பேரணாம்பட்டு நகரில் கடந்த சில மாதங்களாக பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்களின் வீடுகளை நோட்டமிட்டு ஒரு கும்பல் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்கிறது. 

இந்த நிலையில் மீண்டும் மர்ம நபர்கள் பேரணாம்பட்டு நகரில் பூட்டியுள்ள வீடுகளில் கதவை உடைத்து திருடிச் சென்றுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story