தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 Nov 2021 1:19 AM IST (Updated: 14 Nov 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

குடிநீரில் கலக்கும் கழிவுநீர்
சேலம் 27-வது வார்டு ரத்தினசாமிபுரத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குடிநீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீரில் கழிவுநீர் கலப்பதை சரிசெய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், ரத்தினசாமிபுரம், சேலம்.
குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீர்
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் இருந்து செம்மணஹள்ளி செல்லும் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே கம்பைநல்லூர் - செம்மணஹள்ளி சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும். சாலையில் மழை நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் .
-ராம், தர்மபுரி.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஓசூர் மாநகராட்சி எல்லை முடிவு பகுதியான பாகலூர் சாலையை ஒட்டியுள்ள சமத்துவபுரம் எதிரில் செல்லும் கானாறு புதர்மண்டியும், குப்பைகள் சேர்ந்தும் கிடக்கிறது. இதனால் ஆற்று நீர் செல்லும் பாதையில் தடை ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களில் குப்பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கானாற்றை பாதுகாக்க மண்டி கிடக்கும் புதர்களை அகற்றியும், குப்பைகள் கொட்டாமலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ஓசூர்.
பழுதான சிமெண்டு சாலை
நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தெருவையும், பழைய முன்சீப் கோர்ட்டு தெருவையும் இணைக்கும் வகையில் சந்து ஒன்று உள்ளது. இந்த சந்து பகுதியில் நகராட்சி சார்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சிமெண்டு சாலை பழுதாகி காணப்படுகிறது. எனவே இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். எனவே பழுதான சிமெண்டு சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், நாமக்கல்.
குண்டும், குழியுமான தார் சாலை
தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தின் பின்பகுதியில் தொடங்கும் தார்சாலை தடங்கம் பகுதியில் சேலம்- கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையுடன் இணைகிறது. இந்த சாலையை அங்குள்ள கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என பல்வேறு தரப்பினர்  பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர  தடஙகம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்துக்கு செல்பவர்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த சாலையானது பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்களிலோ, நடந்து செல்லவோ முடியாத நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனுசாமி, தர்மபுரி.

Next Story