மதுரகாளியம்மன் உபகோவில்களில் சாமி சிலைகளை உடைத்தது ஏன்?


மதுரகாளியம்மன் உபகோவில்களில் சாமி சிலைகளை உடைத்தது ஏன்?
x
தினத்தந்தி 14 Nov 2021 1:28 AM IST (Updated: 14 Nov 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

மதுரகாளியம்மன் உபகோவில்களில் சாமி சிலைகளை உடைத்தது ஏன்? என்று கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெரம்பலூர்:

சாமி சிலைகள் உடைப்பு
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் கடந்த மாதத்தில் இருந்து தொடந்து சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவமும், இதில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான மலை அடிவாரத்தில் உள்ள பெரியசாமி, செங்கமலையான் கோவிலில் தொடர்ந்து 3-வது முறையாக சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாமி சிலைகள் உடைப்பு வழக்கில் கடந்த மாதம் 8-ந்தேதி கடலூர் மாவட்டம், கால்நாட்டான்புலியூரை சேர்ந்த நடராஜன் என்ற நாதனை(வயது 42) போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கோவில்களில் உள்ள சிலைகளின் அடியில் இருக்கும் தகடுகளை எடுத்து வைத்துக்கொண்டால், அதிக நன்மைகள் நடக்கும் என்ற எண்ணத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக நாதன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் நாதன் கடந்த மாதம் 17-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
குலதெய்வம் நல்லது செய்யவில்லை
இந்நிலையில் சிறுவாச்சூரில் மீண்டும் சாமி சிலைகளை உடைத்ததாக, நாதனை கடந்த 10-ந்தேதி பெரம்பலூர் போலீசார் கைது செய்து, விசாரித்தனர். இதில் முதுநிலை பட்டதாரியான நாதனுக்கு திருமணம் ஆகவில்லை என்றும், அவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டதும், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் அவரது குலதெய்வம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தனக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை. தனது எதிர்காலம் சூனியமாகிவிட்டது. குலதெய்வம் தனக்கு எதுவும் நல்லது செய்யவில்லை என்ற கோபத்தில் குலதெய்வ கோவிலுக்கு சொந்தமான உபகோவில்களில் உள்ள சிலைகளை இரும்பு கம்பி கொண்டு சேதப்படுத்தியதாக நாதன் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து நாதனை கடந்த 10-ந்தேதி போலீசார் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். ஆனால் அங்கு அவர் சாப்பிட மறுத்ததால் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாதனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வலுக்கட்டாயமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மதியம் முதல் நாதன் சாப்பிட மறுத்தும், சிகிச்சைக்கு ஒத்துழைக்காமலும் பிரச்சினை செய்து வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
சிறையில் அடைக்க நடவடிக்கை
இதற்கிடையே ஏற்கனவே ஜாமீனில் வெளியே வந்த நாதனை போலீசார் தொடர்ந்து கண்காணிக்காததாலும், கோவிலில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடாததாலுமே சிறுவாச்சூரில் மீண்டும் சாமி சிலைகள் உடைக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறியதாக இந்து இயக்கங்களும், பக்தர்களும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் நாதனை சிறையில் அடைப்பதற்கும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

Next Story