தொடர் பேய் மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது குமரி
தொடர் பேய் மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது குமரி
.நாகர்கோவில்,
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை பெய்து முடிந்ததை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தற்போது கடந்த சில தினங்களாகவே மழை கொட்டி வருகிறது. இதற்கிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.
மழை
அதன்படி நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. அதன்பிறகும் அடங்காத மழை இரவிலும் நீடித்தது.
மலையோரம் மற்றும் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய, விடிய பெய்த மழையால் அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இரவிலும் மழை நீடித்தது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணித்து அதற்கு ஏற்ப அணையிலிருந்து கூடுதலாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
பேச்சிப்பாறை அணைக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18,958 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து உபரியாக வினாடிக்கு 15,857 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 20,044 கனஅடி நீர் வந்தது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதேபோல் சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 3,125 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து உபரியாக வினாடிக்கு 2,614 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்- 2 அணைக்கு வினாடிக்கு 1201 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து உபரியாக வினாடிக்கு 448 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 873 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து உபரியாக வினாடிக்கு 873 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.46 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75.68 அடியாகவும் தற்போது உள்ளது.
வெள்ளத்தில் மிதக்கிறது
தற்போது அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணியாறு, பரளியாறு, பழையாறு என்று அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஆற்று வெள்ளம் அதிகரித்ததாலும், மழை நிற்காததாலும் 150 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் சிக்கியவர்கள் வீட்ைட விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். குறிப்பாக இறச்சகுளம், பூதப்பாண்டி, நாவல்காடு, நங்காண்டி, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, வீரவநல்லூர், புரவசேரி, ஈசாந்திமங்கலம், செண்பகராமன்புதூர், திருப்பதிசாரம் , சுசீந்திரம், கற்காடு, தேரூர், காட்டுப்புதூர், தேரேகால்புதூர், நாகர்கோவில் புத்தேரி, சக்திகார்டன், ஊட்டுவாழ் மடம், ரெயிவே காலனி, தோவாளை, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள திருவட்டார், குலசேகரம், அருமனை, களியல், பளுகல், முன்சிறை, நித்திரவிளை, கொல்லங்கோடு, குழித்துறையில் ஒரு பகுதி, திக்குறிச்சி, குளச்சல், குருந்தன்கோடு, தேங்காப்பட்டணம், வைக்கல்லூர், பார்த்திபபுரம், மங்காடு, பள்ளிக்கல் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை காரணமாக குமரி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
23 இடங்களில் உடைப்பு
இதற்கிடையே மழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆறு, குளம், வாய்க்கால்கள் ஆகியவற்றில் 23 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் அருகே அமைந்துள்ள சாலைகளில் மழை வெள்ளம் பாய்ந்ததால் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
2,264 பேர் மீட்பு
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 48 குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு சிக்கித்தவித்த 2,264 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாவட்டம் முழுவதும் உள்ள 38 முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்தது. தொடர் பேய் மழை காரணமாக குமரி மாவட்டம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.
ரெயில்-பஸ் போக்குவரத்து ரத்து
அது மட்டுமின்றி விளை நிலங்களில் மழை நீர் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வாழை, ரப்பர், மரவள்ளி, அன்னாசி தோட்டங்களில் மழை நீர் சூழ்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளார்கள். மழையால் செங்கல் சூளை, ரப்பர் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளிகள் கவலையடைந்துள்ளனர்.
தெள்ளாந்தி, ஈசாந்திமங்கலம், தெரிசனங்கோப்பு, தாழக்குடி, அருமநல்லூர் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக 80 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே விரிகோடு பகுதியில் நேற்று மண் சரிவு ஏற்பட்டது. வில்லுக்குறி அருகே இரட்டைக்கரை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாய்நீர் அருகே உள்ள தண்டவாளத்தில் ஆற்று வெள்ளம் போல கரைபுரண்டு சென்றது. இதன்காரணமாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே ரெயில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.
65 வீடுகள் இடிந்தன
மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 65 வீடுகள் இடிந்தன. அதாவது அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 12 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 24 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 16 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 5 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 6 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் ஆகும். இதேபோல் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாவட்டம் முழுவதும் 16 மரங்களும், பல மின்கம்பமும் முறிந்து விழுந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள மொத்தம் 2,040 குளங்களில் உள்ளன. 428 குளங்கள் மறுகால் பாய்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. அதில் இறச்சகுளம் பெரியகுளம், நாடான் குளம், விளங்குளம், குமரன்குளம் ஆகிய 4 குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
இதனால் ஒட்டு மொத்தத்தில் நேற்று குமரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது.
--------
Related Tags :
Next Story