ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி கதி என்ன
மார்த்தாண்டம் அருகே வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற தொழிலாளி தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற தொழிலாளி தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மார்த்தாண்டம் அருகே உள்ள பேரை மூலக்காவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணமணி (வயது 55), தொழிலாளி. இவருக்கு வசந்தி என்ற மனைவியும் (50), அபினிஷ் (22) என்ற மகனும், மோனிஷா என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும், அதில் வந்து சேரும் கிளை ஆறாகிய முல்லையாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிளை ஆறான முல்லையாறு திக்குறிச்சி பகுதியில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
இந்தநிலையில் நேற்று முல்லையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை அந்த பகுதியில் உள்ள மக்கள் திரளாக சென்று பார்த்தனர். அப்போது, அவர்களுடன் கிருஷ்ணமணியும் சென்று வெள்ளப்பெருக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
வெள்ளத்தில் சிக்கினார்
முல்லையாற்றின் கரைப்பகுதியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த போது,
எதிர்பாராத விதமாக திடீரென ஆற்றுக்குள் தவறி விழுந்தார். இதில், ஆற்று வெள்ளத்தில் கிருஷ்ணமணி அடித்துச் செல்லப்பட்டார். இதைகண்டு அங்கு நின்றவர்கள் கூச்சலிட்டனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்கு நின்றவர்கள் செய்வதறியாது திகைத்தனர். அதற்குள் வெள்ளத்தில் சிக்கிய கிருஷ்ணமணி ஒரு சில நிமிடங்களில் மாயமானார்.
இதுபற்றி தகவல் அறிந்த குழித்துறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிருஷ்ணமணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்தது அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்று வெள்ளத்தை பார்க்கச் சென்ற தொழிலாளி தவறி விழுந்து மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story