சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சரியான அளவில் குளோரின் கலக்கப்படுகிறதா?
சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் சரியான அளவில் குளோரின் கலக்கப்படுகிறதா? என குடிநீரேற்ற நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை குடிநீர் நீரேற்றும் நிலையத்துக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா, ஜெபராஜ், மணிமுருகன், சதாசிவம் உள்பட அதிகாரிகள் குழுவினர் நேற்று சென்றனர். அங்கு சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்படும் நீரில் குளோரின் கலக்கப்படுகிறதா? என்றும், சரியான அளவில் குளோரின் கலக்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது மழைக்காலத்தையொட்டி நீரின் மூலமாக நோய்கள் பரவ அதிகம் வாய்ப்புள்ளதால் மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான நீர் வழங்கப்பட வேண்டும் என்றும் அங்குள்ள அதிகாரிகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் குடிநீரும் பாதுகாப்பாக இருக்கிறதா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீரேற்று நிலையத்தில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீரில் 5 பி.பி.எம். அளவிலும், தெரு குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில் 2 முதல் 3 பி.பி.எம். அளவிலும் குளோரின் அளவு இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்று, அங்குள்ள மக்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story