‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 14 Nov 2021 2:20 PM IST (Updated: 14 Nov 2021 2:20 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைகள் உடனடி அகற்றம்

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை தாங்கல்-மேப்பூர் பகுதிக்குட்பட்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டிருக்கும் செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டு இருக்கிறது.

மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகள் கண்ணோட்டம்

பிருந்தாவன் நகர்


சென்னை மேற்கு தாம்பரம் பிருந்தாவன் நகரில் மழைநீர் தெப்பம் போல தேங்கி கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் மழைநீர் புகுந்திருக்கிறது. அகற்றப்படாத இந்த மழைநீர் கொசுக்கள் படையெடுப்புக்கும் மிகப்பெரிய காரணமாக அமைந்து வருகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய்களும் அடைபட்டிருப்பதால் மழைநீரில் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் வெளியே சென்று வரவே பெரிய சிரமத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

- நடராஜன்.

வி.எஸ்.மணி நகர்



திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் வி.எஸ்.மணி நகர் முழுவதுமே மழைநீர் சூழ்ந்திருக்கிறது. தெரு முழுவதும் மழைநீர் குளம் போல தேங்கியிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் தவிப்படைந்து இருக்கிறார்கள். மழைநீருக்கிடையே தான் கடைகளுக்கும், பணியாற்றும் இடங்களுக்கும் மக்கள் சென்று வருகிறார்கள். ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் இந்த பகுதியில் மழைநீர் தேக்கம் என்பது தொடர்கதையாகி வருகிறது. தற்போது தேங்கி கிடக்கும் இந்த மழைநீரை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் கையாளப்பட வேண்டும்.

- இளங்கோவன்.

கோடம்பாக்கம் வாத்தியார்தோட்டம்

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் வாத்தியார் தோட்டம் மெயின் ரோடு முதல் தெருவில் வெள்ளநீர் இன்னும் வடியவில்லை. மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின்வாரியத்தை தொடர்புகொண்டால் அழைப்பை கூட எடுக்க மறுக்கிறார்கள். எங்கள் வேதனை தீருவது எப்போது?

- பொதுமக்கள்.

மின்வாரியத்தின் பாராமுகத்தால் மக்கள் அவதி


திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடுபாக்கம் கிராமத்தில் நியூ ஸ்டார் சிட்டி பகுதியில் மழைவெள்ளத்தால் இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்திருக்கிறது. இதனால் அப்பகுதியினர் அருகில் உள்ள கடைகளுக்கு கூட செல்லமுடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்தநிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கடந்த 3 நாட்களாக அங்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. ஒருபக்கம் மழைநீர், மறுபக்கம் மின்தடை என இருதலை கொல்லி எறும்புகளாக மக்கள் இருக்கிறார்கள். குடிநீர் கேன்கள் கூட தெர்மாகூல் மற்றும் மரப்பலகைகளில் வைத்து கொண்டுவரும் நிலை இருக்கிறது. 

இதுகுறித்து பாலவாயல் துணை மின் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அருகில் உள்ள பகுதிகளில் மின்வசதி கொடுக்கப்பட்ட நிலையில் இந்த பகுதியில் மட்டும் பாராமுகம் காட்டுவது வருத்தம் அளிக்கிறது. மழையால் நிம்மதி இழந்து மக்கள் இருக்கும் நிலையில் மின்வசதி இல்லாதது பெரிய தவிப்பை மக்களுக்கு கொடுத்திருக்கிறது. மின் வசதி இல்லாமல் வாழ பழகிடத்தான் வேண்டுமோ... என்பதையே அதிகாரிகளின் அலட்சியம் எங்களுக்கு உணர்த்துகிறது. இதற்கு தீர்வு தான் என்ன?

- சுரேஷ், விளாங்காடுபாக்கம்.

கழிவுநீர் கால்வாய் அடைப்பு

சென்னை கோட்டூர் பாரதி அவென்யூ முதல் தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால், தெருவெங்கும் கழிவுநீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் தெருவெங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அந்த தெருவின் மக்கள் இக்கழிவுநீரை மிதித்து சென்றுதான் வெளியே சென்றுவர முடிகிறது. எனவே பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- பாரதி அவென்யூ முதல் தெரு மக்கள்.

மழைநீர்-கழிவுநீர் பிரச்சினை

சென்னை திருவான்மியூர் ராஜா சீனிவாச நகர் முதல் தெருவில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தெருக்களில் ஆராக ஓடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் சூழ்ந்துள்ள கழிவு நீரை விரைந்து வெளியேற்ற குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜா சீனிவாச நகர் மக்கள்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு



சென்னை தேனாம்பேட்டை காமராஜர் தெருவில் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், காமராஜர் தெரு.

வடியாத வெள்ளநீரால் மக்கள் அவதி

சென்னை கொளத்தூர் வெற்றிவேல் நகர் 2-வது தெரு, பெருந்தேவி அம்மன் அவென்யூ முதல் தெரு, வியாசர்பாடி ராஜாஜி தெரு, கொட்டிவாக்கம் லட்சுமி பெருமாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சொல்லொணா துயரத்தை அடைந்து வருகிறார்கள்.

- பொதுமக்கள், வெற்றிவேல் நகர்.

நடைமேடை கற்கள் பெயர்ந்தன

சென்னை பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலைய 5-வது நடைமேடையில் சில இடங்களில் தரையில் பதிக்கப்பட்ட கற்கள் உடைந்து பெயர்ந்து போயிருக்கின்றன. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- பயணிகள், சென்னை.

Next Story