தேயிலை தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
தேயிலை தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
பந்தலூர்
பந்தலூர் அருகே தேயிலை தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து வீடுகளை இடித்து தள்ளி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
குடியிருப்புகளை முற்றுகையிட்டன
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-3ல் ஏராளமான தேயிலை தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து குடியிருப்புகளை தாக்கி அட்டகாசம் செய்து வருகிறது. தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களையும் விரட்டுகிறது. சேரம்பாடியிலிருந்து பந்தலூர் செல்லும் சாலையையும் வழிமறித்து வருகிறது
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி அரசு தேயிலை தோட்டத்தில் 7 காட்டுயானைகள்புகுந்து தொழிலாளர்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டன.
உயிர்தப்பினார்கள்
இதனால் தொழிலாளர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இந்தநிலையில் தமிழ்மோகன் என்பவரின் வீட்டை காட்டுயானைகள் சேதப்படுத்தியது. மேலும், வீட்டின் ஜன்னலையும் இடித்து தள்ளி அங்கிருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றன. பாத்திரங்களையும் சேதப்படுத்தியது.
அப்போது வீட்டுக்குள் இருந்தவர்கள் பின்பக்கமாகி தப்பிச்சென்று உயிர்பிழைத்தனர். இதேபோல் அந்தப்பகுதியில் உள்ள மேலும் 2 வீடுகளையும் காட்டு யானைகள் இடித்து தள்ளியது.
காட்டுயானைகள் விரட்டியடிக்கப்பட்டன
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார் வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் தொழிலாளர்கள் உதவியுடன் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து காட்டுயானைகளை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story