மின்கம்பி அறுந்து வயலில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி 8 மாடுகள் சாவு


மின்கம்பி அறுந்து வயலில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி 8 மாடுகள் சாவு
x
தினத்தந்தி 14 Nov 2021 7:26 PM IST (Updated: 14 Nov 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

மின்கம்பி அறுந்து வயலில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி 8 மாடுகள் செத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மின்சாரம் தாக்கியது

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கண்ணையன் நகரைச் சேர்ந்த விவசாயியான வீரராகவன் (வயது 52) என்பவர் வளர்க்கும் 4 எருமை மாடுகளும், திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் பட்டரை பள்ளத்தெருவை சேர்ந்த மைதிலி (38) என்பவரின் 3 பசு மாடுகளும், மேல்நல்லாத்தூர் பட்டரை பள்ளத்தெருவைச் சேர்ந்த மகேஸ்வரி (48) என்பவரின் ஒரு பசுமாடு என 8 மாடுகளும் பட்டரை பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கிருந்த தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இந்த நிலையில் அந்த தென்னை மரமானது அருகில் இருந்த மின் கம்பி மீது விழுந்ததால் மின்கம்பி அறுந்து வயலில் மேய்ந்து கொண்டிருந்த 8 மாடுகள் மீது விழுந்தது.இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கால்நடைகள் பலியானது. மேலும் வயலில் இருந்த 2 நாய் மற்றும் 2 பாம்புகள் மீது மின்சாரம் தாக்கியதில் அவைகளும் பரிதாபமாக செத்தன.

பெரும் விபத்து தவிர்ப்பு

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் லயன் டாக்டர் பாலா என்ற பாலயோகி, மாநில அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி, மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிபாபு, ஊராட்சி மன்ற துணை தலைவர் பில்லா என்கின்ற சதீஷ்குமார் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி இறந்த கால்நடைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வயலிலேயே கால்நடைகளுக்கு பிரேத பரிசோதனை செய்து அந்த இடத்திலேயே அடக்கம் செய்தனர். மேலும் மின்சாரம் தாக்கி 8 கால்நடைகள் பலியான சம்பவத்தில் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story