திருவண்ணாமலையில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட கடன்களில் ரூ.5¼ கோடி மோசடி கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் தகவல்
திருவண்ணாமலையில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட கடன்களில் ரூ.5¼ கோடி மோசடி நடந்து உள்ளது என கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்:
தின்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்து, வங்கி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு குறித்து எனது தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு செய்தது. இதில் 17 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பான அறிக்கை முதல்-அமைச்சரிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் முறைகேடுகள் நடக்கிறதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடன் சங்கங்கள், வங்கிகளில் ஒரே நபர் பெயரில் 600-க்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டு ரூ.5 கோடியே 30 லட்சம் வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த தொகை சம்பந்தப்பட்டவரிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது. இதேபோல் ராமநாதபுரம் அருகே உள்ள கிளியூர் கூட்டுறவு வங்கி கிளையில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1½ கோடி வரை கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story