முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியாக உயர்வு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக கேரள பகுதிகளுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி:
முல்லைப்பெரியாறு அணை
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையினால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. அப்போது அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டாம் என கேரள அரசு வலியுறுத்தியது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இதற்கிடையே அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்தது. அப்போது நவம்பர் 11-ந்தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 139.50 அடியாக பராமரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் அணையின் நீர்மட்டத்தை 139 அடியை எட்ட விடாமல் தொடர்ந்து கேரள மந்திரிகள் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர். அப்போது கேரளாவுக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறப்பை குறைத்து நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நீர்மட்டம் 140 அடி
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை முதல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 12 மணி நிலவரப்படி 140 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 400 கனஅடியாக அதிகரித்துள்ளது. வினாடிக்கு 900 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
அணையின் நீர்மட்டம் தற்போது 140 அடியாக உயர்ந்து உள்ளதால், தமிழக பொதுப்பணித்துறையினர் கேரளா பகுதிக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டும்போது 2-வது வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது 3-வது வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படும். இன்னும் ஒரு சில தினங்களில், 142 அடியான முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story