தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சேறும், சகதியுமான சாலை
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த ஆண்டித்தோப்பு கிராமம் வடக்கு தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மண் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் மண் பாதையில் தேங்கி சேறும், சேகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் சேறும், சகதியுமான சாலையில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சாலை அமைக்க தர நடவடிக்கை எடுக்கப்படுமா?
-பிரபாகரன், திருமருகல்.
மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் நல்லடை சாலை வழியாக ஐஸ்வர்யம் நகர், பரசலூர் வரை அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் எரியாமல் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக நல்லடை சாலை வழியாக ஜஸ்வர்யம் நகர், பரசலூர் வரை அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
-பொதுமக்கள், மயிலாடுதுறை.
தேங்கி கிடக்கும் மழைநீர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மணிக்கூண்டு, பெரிய கடை தெரு பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றவும், வருங்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-விக்னேஸ்வர், மயிலாடுதுறை.
தெருவிளக்குகள் ஒளிருமா?
நாகை மாவட்டம் ராமாணாயக்கன்குல தெருவில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த தெருவிளக்குகள் பராமரிப்பின்றி தற்போது எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?
-ருகாசினி, நாகை.
Related Tags :
Next Story