விஷ வாயு தாக்கி 2 பேர் பலி
விஷ வாயு தாக்கி 2 பேர் பலி
வீரபாண்டி,
திருப்பூரில் சாயப்பட்டறை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2பேர் பலியானார்கள். 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சாயப்பட்டறை கழிவு நீர் தொட்டி
திருப்பூர் வீரபாண்டி அருகே கொத்துதோட்டம் பகுதியில் தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான பேன்டோன் டையர்ஸ் என்ற பெயரில் சாயப்பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்த சாயப்பட்டறையின் பின்புறம் 20 அடி ஆழத்தில் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டறையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த தினேஷ் பாண்டி (வயது 32) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் தங்கி இருந்து கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்து வரும் தொழிலாளர்களான கோவை காரமடை பகுதியை சேர்ந்த வடிவேலு (28), நாகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரை வரவழைத்துள்ளனர். அதன்படி தொழிலாளர்கள் நேற்று அந்த சாயப்பட்டறைக்கு சென்று கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். வடிவேலும், நாகராஜியும் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினர். தொட்டிக்கு மேல் பகுதியில் ராமகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார்.
2 பேர் பலி
அப்போது தொட்டிக்குள் இறங்கிய வடிவேலும், நாகராஜியும் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். அப்போது சாயப்பட்டறை அலுவலகத்தில் இருந்த மேலாளர் தினேஷ்பாண்டி, எலெக்ட்ரீசியன் ராஜேந்திரன் ஆகியோர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் தினேஷ்பாண்டி கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி நாகராஜை தூக்கிக்கொண்டு படிகளில் ஏறி தொட்டி மேல் நிற்பவர்களிடம் கொடுத்தார். இதற்கிடையில் தொட்டிக்குள் வடிவேல் மயங்கி விழுந்து கிடந்தார். அவரை மீட்க தொட்டியின் அடிப்பகுதிக்கு மீண்டும் தினேஷ் பாண்டி சென்றார். அதன்பின்னர் அவர் மேலே வரவில்லை. அவரும் மூச்சுத்திணறி உள்ளே விழுந்தார்.
இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும், வீரபாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு துறை வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோரும் மயங்கி விட்டனர். உடனே அவர்கள் 3 பேரையும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தொட்டிக்குள் இறங்கி மயங்கி கிடந்த வடிவேல், தினேஷ் பாண்டியை மீட்டு மேலே கொண்டு வந்த போது அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
வாக்குவாதம்
இதற்கிடையில் இறந்தவர்களின் உடலை அங்கிருந்து எடுத்து செல்ல விடாமல் உறவினர்கள் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்போதுதான் உடலை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வடிவேலுவின் தந்தையும் நிவாரணம் வழங்க கோரி அந்த நிறுவனம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார், சாயப்பட்டறை உரிமையாளர் தனலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story