தேவகோட்டை அருகே எம்.ஜி.ஆர். சிலை
தேவகோட்டை அருகே எம்.ஜி.ஆர். சிலையை சைதை துரைசாமி திறந்து வைத்தார்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே எம்.ஜி.ஆர். சிலையை சைதை துரைசாமி திறந்து வைத்தார்.
சிலை திறப்பு விழா
கிராம நிர்வாக அலுவலர் பதவியை உருவாக்கிய முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நன்றி செலுத்தும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சமூக கல்வி அறக்கட்டளை, தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சேர்ந்து 9½ அடி உயரத்தில் எம்.ஜி.ஆருக்கு முழு உருவ வெண்கல சிலையை அமைக்க முடிவு செய்தனர். அதன்படி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா மேலசெம்பொன்மாரி கிராமத்தில் காரைக்குடி-தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கிராம நிர்வாக அலுவலர் சமூக கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் எம்.ஜி.ஆர். முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.
இதையடுத்து சிலை திறப்பு விழா நடந்தது. சங்க நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். சிலையை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி திறந்து வைத்து மாலை அணிவித்தார். பின்னர் அருகே உள்ள முத்துமண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா, கிராம நிர்வாக அலுவலர்கள் தின ஆண்டு விழா, மூன்று தலைமுறை கிராம நிர்வாக அலுவலர்கள் சந்திக்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டேன்
விழாவுக்கு வந்தவர்களை ரெங்கசாமி வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் பதவி என்றால் என்ன? இப்பதவி உருவானது எப்படி? இந்த சட்டம் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தபோது ஆதரித்தவர்கள் யார்? எதிர்த்தவர்கள் யார்? அவர்கள் பேசியது என்ன? என்ற முழு விவரமும் அப்படியே தொகுத்து வெளியிடப்பட்ட புத்தகத்தை சைதை துரைசாமி வெளியிட்டார். அதை அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் பெற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து சைதை துரைசாமி பேசியதாவது:-
நான் 14 வயதில் அரசியலுக்கு வந்தவன். எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டேன். சைதாப்பேட்டை சட்டமன்ற தேர்தலில் நான் தோல்வியுற்றபோது எம்.ஜி.ஆர். சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் நீ தான் என கூறினார். பல ஆண்டுகாலம் கோர்ட்டு நடவடிக்கைகளால் தேர்தல் நடைபெறவில்லை. அவர் கூறியபடி 30 ஆண்டுகள் கழித்து அப்படியே கனவு பலித்தது. அவர் மறைந்தாலும் அவர் கூறியபடி நான் சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்தேன். சென்னை மாநகராட்சி மேயராக நான் பொறுப்பு வகித்தபோது தூய்மையான, சுத்தமான ஊழலற்ற நிர்வாகத்தை தந்தேன்.
இரட்டை இலை
பசி என்று யாரும் வரக்கூடாது. முதலில் சாப்பிட்டாயா? என்று தான் எம்.ஜி.ஆர். கேள்வி கேட்பார். சாப்பிடவில்லை என்றால் சாப்பிட்டுவிட்டு வந்த பிறகு தான் அவரிடம் பேசுவார். கிராம நிர்வாக அதிகாரிகள் நியமனத்தின்போது 200 பேரின் பட்டியலை நான் எம்.ஜி.ஆரிடம் கொடுத்தேன். அப்போது இருந்த அதிகாரி இவ்வளவு பேரா எனக்கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., துரைசாமி எதைச் செய்தாலும் அதில் கட்சி நலன் இருக்கும் என கூறினார்.
சென்னை மாநகராட்சியில் கட்சி நிதி வசூலித்தால் கெட்டப் பெயர் ஏற்படும் என நான் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் நேரில் கூறினேன். அதற்கு ஜெயலலிதா உங்களைப் பற்றி எம்.ஜி.ஆர். என்னிடம் நிறைய சொல்லியுள்ளார் என கூறினார். அந்த அளவுக்கு நான் நம்பிக்கையைப் பெற்றவன். இரட்டை இலையில் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
Related Tags :
Next Story