பெரம்பலூரில் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
சட்ட விழிப்புணர்வு கொண்டாட்டத்தின் நிறைவு நாளான நேற்று பெரம்பலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பெரம்பலூர்,
ஊர்வலம்
75-ம் ஆண்டு சுதந்திரதின விழா பவளவிழாவாகவும், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவாகவும் கொண்டாடும் விதமாக கடந்த மாதம் 2-ந் தேதி முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில், சட்ட விழிப்புணர்வு கொண்டாட்டத்தின் நிறைவு நாளான நேற்று, பெரம்பலூரில் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
விழிப்புணர்வு வாசகங்கள்...
பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே தொடங்கிய ஊர்வலத்தை முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பல்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்து ஊர்வலத்தில் நடந்தும் சென்றார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், குழந்தைகள் சட்ட விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டு சென்றனர். ஊர்வலம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்குள் சென்று மீண்டும் பாலக்கரை ரவுண்டானா அருகே நிறைவடைந்தது.
இதில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும் (பொறுப்பு), மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதியுமான கிரி மற்றும் ஏனைய நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான லதா செய்து இருந்தார்.
Related Tags :
Next Story