தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் பொதுமக்கள்


தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 Nov 2021 1:49 AM IST (Updated: 15 Nov 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் பொதுமக்கள்

ஓமலூர், நவ.15-
மேற்கு சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்கள் ஆற்றை கயிறு கட்டி கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வெள்ளப்பெருக்கு
தொடர் மழை காரணமாக மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கினால் காடையாம்பட்டி, கோட்டேரி உபரி நீர் பண்ணப்பட்டி ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் மாரக்கவுண்டன் புதூர் அருகே கரை உடைப்பு ஏற்பட்டது. 
இதனால் அந்த பகுதியில் உள்ள வீடு மற்றும் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் அந்த பகுதியில் சாமந்தி பூக்கள், மஞ்சள் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்த விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து அவை சேதமடைந்தன. இதையடுத்து அந்த பகுதி மக்கள் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டையை போட்டு அடைத்தனர். 
தொடர்ந்து அந்த பகுதி மக்கள் இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை அடைத்து சரபங்கா ஆற்றிலேயே திருப்பிவிட்டனர். இந்த தண்ணீர் கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரிக்கு சென்று உபரிநீர் கோடிவாய்க்காலில் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் கோட்டைமேடு தாராபுரம் ஊராட்சி செல்லியாண்டியம்மன் காட்டுவளவு, தோப்புக்காடு ஆகிய பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும், தோட்டங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. 
தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
மேலும் தாராபுரம் செல்லப்பன் காட்டுவளவு பகுதியில் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றினை கடக்க முடியாமல் கயிறு கட்டி அந்த பாலம் இருந்த பகுதியில் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். இவ்வாறு ஆபத்தாக கடக்க முடியாதவர்கள், சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. 
இதையறிந்த ஓமலூர் எம்.எல்.ஏ. மணி, நேற்று தாராபுரம் அருகே தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்ட இடம் மற்றும் கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டைமேடு தாராபுரம் செல்லியாண்டி அம்மன் காட்டுவளவு, பண்ணப்பட்டி ஏரி, மாரகவுண்டன்புதூர் உள்ளிட்ட இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து சேதமான இடங்கள் மற்றும் வீடுகளில் வெள்ளநீர் புகுந்த இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது கஞ்சநாயக்கன்பட்டி கோட்ட மேடு, செல்லியாண்டி அம்மன் காட்டுவளவு பகுதியில் பொதுமக்கள் பொது கழிப்பிட வசதி வேண்டியும், சாக்கடை கால்வாய் வசதி வேண்டியும் மனு கொடுத்தனர். இந்த ஆய்வின் போது காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சேரன் செங்குட்டுவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், ஓமலூர் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சேட்டு, ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story