பிட்காயின் விவகாரத்தில் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி
பிட்காயின் விவகாரத்தில் பாரபட்சம் பார்க்காமல் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறக்கூடாது என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூரு:
காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிட்காயின் விவகாரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில், பா.ஜனதாவுக்கு தொடர்பு உள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். அத்துடன் இந்த முறைகேட்டை மூடி மறைக்க அரசு முயற்சிப்பதாகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையொட்டி பெங்களூரு விதானசவுதாவில் வைக்கப்பட்டு இருந்த, அவரது உருவப்படத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர் பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் காங்கிரசின் குற்றச்சாட்டு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது;-
பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை
பிட்காயின் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இந்த விவகாரத்தில் எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் எனது தலைமையிலான அரசு வெளிப்படையாக இருக்கும். பிட்காயின் விவகார முறைகேட்டை வெளிக் கொண்டு வந்ததே பா.ஜனதா அரசு தான்.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.க்கு சிபாரிசு செய்திருப்பதும் பா.ஜனதா தான். சி.பி.ஐ. இண்டர்போலுக்கும் இந்த வழக்கு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிட்காயின் விவகாரத்தில் கர்நாடகம், நாட்டின் பிற பகுதியை சேர்ந்தவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் பாரபட்சம் இன்றி விசாரணை நடைபெறுவதுடன், தவறு செய்தவர்களுக்கு சரியான தண்டனை பெற்று கொடுக்கப்படும்.
கண்டு கொள்ளாமல் விட்டனர்
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கேட்டு இருக்கும் 6 கேள்விகளுக்கும் உரிய பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன். இந்த விவகாரம் 2016-ம் ஆண்டில் இருந்தே நடந்துள்ளது. அப்போது கா்நாடகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். காங்கிரஸ் ஆட்சியில் ஏன் விசாரணை நடைபெறவில்லை. முதல்-மந்திரியாக இருந்தவரும், பிற மந்திரிகளும் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.
அதனால் பிட்காயின் விவகாரத்தில் ஸ்ரீகிருஷ்ணாவை சரியாக விசாரிக்காமலும், அவரது பின்னணி குறித்து விசாரிக்காமலும், அனுப்பி வைத்தது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தவரிடமும், போலீஸ் மந்திரியாக இருந்தவரிடம் தான் இதுபற்றி ரன்தீப்சிங் சுர்ஜேவாலா முதலில் கேட்க வேண்டும்.
பா.ஜனதாவுக்கு அவசியமில்லை
பிட்காயின் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகிருஷ்ணாவை காங்கிரஸ் ஆட்சியில் கைது செய்து, பின்னர் அவரை விடுவித்தது குறித்து தெரிவிக்க வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தான் ஸ்ரீகிருஷ்ணாவை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் பிட்காயின் முறைகேடு நடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ரூ.9 கோடி பிட்காயினையும் மீட்டு இருந்தனர்.
பிட்காயின் முறைகேடு விவகாரத்தை வெளியே கொண்டு வந்த பா.ஜனதா மீதே காங்கிரசார் குற்றச்சாட்டு கூறுகின்றனர். ஸ்ரீகிருஷ்ணாவை கைது செய்து விசாரிக்காமல், வீட்டுக்கு அனுப்பிய காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து பா.ஜனதாவினர் பாடம் கற்க வேண்டிய அவசியமில்லை.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு
பா.ஜனதா மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திவிட்டு, பிட்காயின் முறைகேடு விவகாரம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க காங்கிரஸ் தலைவர்கள் முன்வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, டுவிட்டரில் வெளியான ஒரு பதிவின் ஆதாரத்தை வைத்து கொண்டு தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி பேசக்கூடாது.
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்த வேண்டும். ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர், அனைத்து ஆதாரங்களையும் வைத்து கொண்டு பேச வேண்டுமே தவிர, ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக்கூடாது. பிட்காயின் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த விதமான அரசியல் பின்னணியுடன் இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது உறுதி.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story