மாமல்லபுரத்தில் கடல் அரிப்பு


மாமல்லபுரத்தில் கடல் அரிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2021 12:21 AM GMT (Updated: 15 Nov 2021 12:21 AM GMT)

மாமல்லபுரத்தில் நேற்று கடலில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு கரைப்பகுதி வரை 20 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உட்புகுந்ததால் கடற்கரை கோவிலுக்கு தெற்கு பக்க கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் கடலின் தட்ப வெப்ப நிலை மாறி கடல் பலத்த சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று வழக்கத்துக்கு மாறாக பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு கரைப்பகுதி வரை 10 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உட்புகுந்ததால் மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு தெற்கு பக்க கடற்கரை பகுதியில் 2 மீட்டர் உயரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

மணல்பகுதிகள் கடல் அரிப்பால் சுவர்போல் எழும்பி நிற்கின்றன. மீனவர் பகுதியிலும் கடல் அரிப்பால் தங்கள் படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

தூண்டில் வளைவுகள் அமைக்க கோரிக்கை

அதேபோல் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள், மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் அடிக்கடி கடலில் அடித்து செல்லப்படுகின்றன. கடற்கரை கோவிலை கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்க கற்கள் கொட்டப்பட்டுள்ளதால், கடலின் தட்ப வெப்ப நிலை அடிக்கடி மாறும்போது இதுபோல் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அலைகள் முன்னோக்கி வருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடல் சீற்றம் ஒரு புறம் இருந்தாலும் தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதி மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றதை காண முடிந்தது. இதற்கிடையில் மாமல்லபுரத்தில் கடல் அரிப்பு ஏற்படாத வகையில் மாமல்லபுரம் கடற்பகுதி முழுவதும் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மீனவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story