மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கனமழைக்கு பிறகு நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு அவர்கள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்து பொழுதை கழித்தனர்.
பாரம்பரிய நினைவு சின்னம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இந்த புராதன சின்னங்களை காண நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்வதுண்டு.
இந்திய அளவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் 2-வது இடமாக மாமல்லபுரம் திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாமல் அங்குள்ள புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
விடுமுறை தினம்
மழையால் கடந்த சில நாட்களாக பயணிகள் வரத்து இல்லாமல் இருந்து. இந்தநிலையில் தற்போது மழை நின்றதாலும் நேற்று வார விடுமுறை தினம் என்பதாலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பயணிகள் வரத்து நேற்று அதிகம் இருந்தால் அவர்களை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ, கார் டிரைவர்கள், நடைபாதை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் தற்போது தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்ட புராதன சின்னங்களை காண தொடக்கத்தில் பயணிகள் குறைவான அளவிலேயே மாமல்லபுரம் வந்தனர்.
காத்திருக்கும் அவல நிலை
தற்போது பருவ மழைகாலம் முடிந்தபிறகு வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு போன்ற இரு தினங்களில் இன்னும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காலை 7, 8, 9 மணிக்கு வரும் பார்வையாளர்கள் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட தொல்லியல் புராதன சின்னங்கள் திறக்கும் வரை அங்கேயே சில மணி நேரம் வரை காத்திருந்து புராதன சின்னங்களை கண்டுகளிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
அதேபோல் மாலை 3, 4 மணிக்கு வரும் பயணிகள் 5 மணிக்கு புராதன சின்னங்கள் மூடப்படும் நிலையில் அவசர, அவசரமாக கண்டு களித்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. குறுகிய நேரத்தில் அனைத்து புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாத ஏமாற்றத்துடன் பயணிகள் பலர் வீடு திரும்புவதை காண முடிகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க கூடுதல் நேரம் திறந்து பார்வையாளர்களின் குறைகளை போக்க தொல்லியல் துறை முன் வரவேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story