புதர் சூழ்ந்த குளத்தை தூர்வார வேண்டும்
அய்யன்கொல்லி அருகே புதர் சூழ்ந்த குளத்தை தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பந்தலூர்
அய்யன்கொல்லி அருகே புதர் சூழ்ந்த குளத்தை தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோடையில் வற்றாத குளம்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே மலப்பொட்டு கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் குளம் ஒன்று அமைந்து உள்ளது. இங்கு கோடைகாலம் உள்பட அனைத்து காலங்களிலும் தண்ணீர் காணப்படும். இந்த குளத்தை மலப்பொட்டு மட்டுமின்றி சுற்றி உள்ள சளிவயல், காரக்கொல்லி, கீழகாரக்கொல்லி, அத்திசால், அய்யன்கொல்லி, மூலைக்கொல்லி, செம்பக்கொல்லி, கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட (ரேஞ்ச்-3) பகுதி உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் அந்த குளத்தில் குளிப்பது, துணிகளை துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் குடிநீருக்கு பயன்படுத்துவது இல்லை.
தொற்று நோய் பரவும் அபாயம்
இந்த நிலையில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து அந்த குளத்தை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அங்குள்ள தண்ணீர் மாசுபட்டு வருகிறது. மேலும் அதை பயன்படுத்துபவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து மலப்பொட்டு கிராம மக்கள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் உள்ள குளத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கும். மழைக்காலத்தில் மட்டுமின்றி கோடைகாலத்திலும் உதவியாக இருந்து வருகிறது. தற்போது அங்கு புதர் செடிகள் சூழ்ந்து கிடக்கின்றன. இதனால் குளத்தின் பரப்பளவு குறைந்து வருகிறது. மேலும் தண்ணீர் மாசுபட்டு உள்ளது.
தூர்வார வேண்டும்
இது தவிர மலப்பொட்டு மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களிலும் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை தீர்க்க வற்றாமல் இருக்கும் இந்த குளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கான திட்டங்களை அதிகாரிகள் தொடங்க வேண்டும். அதற்கு முன்னதாக குளத்தை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்றி தூர்வார வேண்டும்.
இதன் மூலம் தண்ணீர் மாசுபடுவது தடுக்கப்படும். மேலும் குளத்தை சுற்றி தடுப்புச்சுவர் கட்டி தொடர்ந்து பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story