திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாமை மொபட்டில் சென்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், நாசர் ஆய்வு செய்தனர்.
தடுப்பூசி முகாம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்ற 8-வது கொரோனா தடுப்பூசி முகாமை நேற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் ஆற்காடு குப்பம் பகுதியில் தமிழக அரசின் வீடு தேடி வரும் மருத்துவம் திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு பாப்பிரெட்டிப்பள்ளி என்ற இடத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அவர் பார்வையிட்டார். மேலும் பழங்குடியின மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை அவர் வழங்கினார்.
பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் மக்களை தேடி மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தனர்.
மொபட்டில் சென்றனர்
பின்னர் காட்டுப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்ய இருவரும் சென்றபோது குறுகிய பாதையில் அமைச்சர்களின் கார்கள் வர தாமதம் ஆனதால் சிறிது தூரம் நடந்து சென்றனர். பின்னர் அந்த வழியாக வந்த ஒருவரது மொபட்டை வாங்கி இருவரும் பயணம் செய்தனர். மொபட்டை அமைச்சர் நாசர் ஓட்ட, அவருக்கு பின்னால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமர்ந்து சென்று மருத்துவ முகாம்களை ஆய்வு செய்தனர்.
இந்த முகாமில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, திருத்தணி எம்.எல்.ஏ.,எஸ். சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசும்போது, "திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 886 பேருக்கு 2-வது தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. இந்த மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 75 எண்ணிக்கை சதவீதமாகவும், 2-வது தவணை போட்டவர்கள் 33 சதவீதமாக உள்ளது" என்று கூறினார்.
பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story