உயிரோடு இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் வாங்கி வீட்டை அபகரித்த மகன்கள். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் விவசாயி புகார்
உயிரோடு இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் வாங்கி வீட்டை அபகரித்த மகன்கள் மீது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.
திருப்பத்தூர்
உயிரோடு இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் வாங்கி வீட்டை அபகரித்த மகன்கள் மீது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா அண்ணாமலைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 75), விவசாயி. இவர், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வீடு அபகரிப்பு
எங்கள் கிராமத்தில் எனக்கு 2 வீடுகள் உள்ளன. எனக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2019-ம் ஆண்டு எனது மகன்கள் எனது வீட்டை அவர்களின் பெயருக்கு எழுதி தர வேண்டும் என என்னை வற்புறுத்தினர். இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், என்னை அவர்கள் மிரட்டினர். இதனால், நான் வீட்டை விட்டு வெளியேறி வெளியூரில் வசித்து வந்தேன்.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க சென்றேன். அப்போது நான் உயிரிழந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழை வங்கியில் காட்டி எனக்கு சொந்தமான பணத்தை எடுத்துள்ளனர். மேலும், நான் உயிரோடு இருக்கும்போது எனது இறப்பு சான்றிதழை காட்டி எனது வீட்டையும் அபகரித்துள்ளனர்.
தாசில்தார் மீது நடவடிக்கை
இதை நான் தட்டிக்கேட்கும்போது எனக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே, போலி இறப்பு சான்றிதழ் பெற்ற எனது மகன்கள் மீதும், இறப்பு சான்றிதழ் வழங்கிய அரூர் தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது உயிர் பாதுகாப்பு கருதியே நான் இங்கு வந்து மனு கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story