குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
நாமக்கல்:
நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 216 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.
கூட்டத்தில் பள்ளிபாளையத்தை சேர்ந்த எல்லை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற எல்லை காவலர் அண்ணாமலைக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
இலவச வீட்டுமனை பட்டா
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், கோனூர் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகளுக்கும், செல்லப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த 21 பயனாளிகளுக்கும், களங்காணி கிராமத்தை சேர்ந்த 56 பயனாளிகளுக்கும் என மொத்தம் 80 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேலு, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் (பொறுப்பு) ஜோதி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story