சிறுவன் லாரி மோதி பலியான வழக்கில் லாரி டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை
லாரி டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து குளித்தலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
குளித்தலை
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வை.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இருதயசாமி என்பவரின் மகன் ஜான்டேவிட் (வயது 16). இவர் குளித்தலையில் உள்ள தேவாலயம் செல்வதற்காக தனது தம்பியான மோகன்தாஸ் உடன் மொபட்டில் வைபுதூரில் இருந்து குளித்தலை நோக்கி கடந்த 2016-ம் ஆண்டு சென்று கொண்டிருந்தார்.
குளித்தலை அருகே உள்ள மையிலாடி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த லாரி மொபட் மீது மோதியது.இதில் சகோதரர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். ஜான்டேவிட் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜான்டேவிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நடந்து வந்தது. இந்த விபத்து குறித்து விசாரித்த நீதிபதி பாக்யராஜ் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (43) என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 5 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story