வெடிவிபத்தில் 2 மாடி கட்டிடம் நொறுங்கியது; வேலை செய்த 2 பெண்கள் கதி என்ன?
சிவகாசியில் நேற்று நடந்த வெடிவிபத்தில் 2 மாடி கட்டிடம் நொறுங்கியது. அங்கு ேவலை பார்த்த 2 பெண்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
சிவகாசி
சிவகாசியில் நேற்று நடந்த வெடிவிபத்தில் 2 மாடி கட்டிடம் நொறுங்கியது. அங்கு ேவலை பார்த்த 2 பெண்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
பட்டாசுகள் பதுக்கல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரில் உள்ள ஒரு வீட்டை மதுரையை சேர்ந்த ராமநாதன் என்பவர் வாடகைக்கு பிடித்திருந்தார். தரைக்கு கீழே ஒரு தளமும், தரைக்கு மேல் 2 மாடிகளும் என 3 அடுக்குகளை கொண்ட இந்த வீட்டில், பட்டாசு மூலப்பொருளான ரசாயனம் சேர்க்கும் குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த வீட்டில் பட்டாசுகள் அதிக அளவில் பதுக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் வேல்முருகன் (வயது 37), மனோஜ்குமார் (27), கார்த்தீசுவரி (33), ஹமிதா (55) ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர்.
பயங்கர வெடி விபத்து
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இந்த வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது., 3 அடுக்குகளும் அப்படியே நொறுங்கி, தரைமட்டத்துக்கு மேல் வெறும் இடிபாடுகளாக காட்சி அளித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் 2 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
புகை மண்டலம்
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறிய வண்ணமாக இருந்ததால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் சம்பவ இடத்தை நெருங்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்தை தீயணைப்பு வீரர்கள் நெருங்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதன் பின்னர் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.
2 பெண்கள் மாயம்
இந்த விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்த வேல்முருகன், மனோஜ் குமார் ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் பணியில் இருந்த கார்த்தீசுவரி, ஹமிதா ஆகிய 2 பெண்களையும் காணவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மீட்பு பணியை துரிதப்படுத்த உதவினர். மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விபத்திற்கு பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததுதான் காரணம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கதி என்ன?
மாயமான பெண்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. எனவே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு பொதுமக்களை அனுமதிக்கவில்லை.
எந்திரங்களைக் கொண்டு இடிபாடுகளை முற்றிலுமாக அகற்றிய பின்னரே உயிரிழப்பு ஏதும் இருக்கிறதா? என தெரியவரும். இரவு 9 மணி வரை பணி நடந்தது. பின்னர் மழை பெய்ததால் பணி நிறுத்தப்பட்டது.
இந்த வெடிவிபத்து சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story