பருத்தி- மக்காச்சோள வயல்களில் தண்ணீர் புகுந்தது


பருத்தி- மக்காச்சோள வயல்களில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 16 Nov 2021 1:01 AM IST (Updated: 16 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

பலத்த மழையால் பருத்தி- மக்காச்சோள வயல்களில் தண்ணீர் புகுந்தது.

பெரம்பலூர்:

28 ஏரிகள் நிரம்பின
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பகல் நேரத்தில் மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. நேற்று அதிகாலை வரை விட்டு, விட்டு பலத்த மழை கொட்டித்தீர்த்தது. பின்னர் இரவில் தொடர்ந்து மழை பெய்தது.
ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் விசுவக்குடி, கொட்டரை நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், 28 ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும் பல குளங்கள் நிரம்பியுள்ளன.
பயிர்கள் பாதிப்பு
நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் அய்யலூர் குடிக்காடு, வரகுபாடி, நத்தகாடு, சிறுகன்பூர், அய்யலூர், காரை ஆகிய பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் புகுந்ததால், அந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசிடம் இருந்து நிவாரண தொகை பெற்று தருமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருதையாற்றில் இருந்து உபரிநீர் தெற்கு மாதவி கிராமத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்தது. மேலும் சின்ன வெங்காயம் பயிர் செய்யப்பட்ட நிலங்களிலும் மழைநீர் தேங்கியது. வடகிழக்கு பருவமழையால் இதுவரை பெரம்பலூர், வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் சுமார் 60 எக்ேடர் பருத்தி, மக்காச்சோள பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளும், தோட்டக்கலை துறை அதிகாரிகளும் கணக்கெடுக்க உள்ளனர்.
கடலை பயிரிட ஆர்வம்
சின்ன வெங்காயம் மழைநீரில் மூழ்கி அழுகுவதால், ஆலத்தூர் தாலுகாவில் நிறைய விவசாயிகள் சின்ன வெங்காய பயிருக்கு பதிலாக நிலக்கடலை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண்மை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் விவசாயிகளை பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தி வருகின்றனர்.மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
செட்டிகுளம்-8, பாடாலூர்-48, அகரம்சீகூர்-4, லெப்பைக்குடிக்காடு-8, புதுவேட்டக்குடி-12, பெரம்பலூர்-19, எறையூர்-6, கிருஷ்ணாபுரம்-10, தழுதாழை-17, வி.களத்தூர்-27, வேப்பந்தட்டை-13.

Next Story