முதியவருக்கு, டிக்கெட் கட்டணத்துடன் ஆயிரம் ரூபாய் இழப்பீடு; கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
முன்பதிவு செய்தும் பஸ்சில் ஏற்றாததால் முதியவருக்கு டிக்கெட் கட்டணத்துடன் ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:முன்பதிவு செய்தும் பஸ்சில் ஏற்றாததால் முதியவருக்கு டிக்கெட் கட்டணத்துடன் ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு, நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
நுகர்வோர் கோர்ட்டில் மனு
பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜில் வசித்து வருபவர் சங்கமேஸ்வரன் (வயது 67). இவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கு வர கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) பஸ்சில் முன்பதிவு செய்து இருந்தார். அவர் திருவண்ணாமலையில் உள்ள பஸ் நிலையத்தில் காத்து நின்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பஸ் வரவில்லை.
இதுகுறித்து அவர் கண்டக்டரை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது பஸ் நிலையத்தில் நீங்கள் இல்லாததால் பஸ் சென்று விட்டது என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து சங்கமேஸ்வரன் திருவண்ணாமலையில் இருந்து ஓசூருக்கு வந்து அங்கிருந்து பெங்களூருவுக்கு வந்தார். இந்த நிலையில் கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் மீது பெங்களூரு சாந்திநகரில் உள்ள 2-வது நகர கூடுதல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சங்கமேஸ்வரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆயிரம் ரூபாய் இழப்பீடு
அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல், அன்றைய தினம் திருவண்ணாமலையில் ஒரு நிகழ்ச்சி நடந்ததால் பஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருந்தது. ஆனால் இது தெரியாமல் மனுதாரர் வழக்கமான பஸ் நிலையத்தில் நின்றார். அவருக்கு கண்டக்டர் குறுந்தகவல் அனுப்பியும் அவர் வரவில்லை. இதனால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு இழப்பீடு தொகையாக ஆயிரம் ரூபாய் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து ஓசூருக்கு வந்த டிக்கெட் கட்டணம் ரூ.131, ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு வந்த டிக்கெட் கட்டணம் ரூ.69, திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கு வர முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணம் ரூ.497-ஐ 30 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story