மதுபானக்கடையை சூறையாடிய சம்பவம்; வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்து சிறுமி, 6 பெண்கள் கைது


மதுபானக்கடையை சூறையாடிய சம்பவம்; வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்து சிறுமி, 6 பெண்கள் கைது
x
தினத்தந்தி 16 Nov 2021 2:23 AM IST (Updated: 16 Nov 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

மதுபானக்கடையை சூறையாடிய சம்பவத்தில் இரவு நேரத்தில் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி, 6 பெண்களை போலீசார் கைது செய்தனர். போலீசார், லஞ்சம் வாங்கிவிட்டதாக கிராம மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

சிக்கமகளூரு: மதுபானக்கடையை சூறையாடிய சம்பவத்தில் இரவு நேரத்தில் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி, 6 பெண்களை போலீசார் கைது செய்தனர். போலீசார், லஞ்சம் வாங்கிவிட்டதாக கிராம மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர். 

பெண்கள் மீது தாக்குதல்

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எம்மேதொட்டி அருகே முஸ்லாம்புரா கிராமத்தில் மால்தேஷ் என்பவர் புதிதாக மதுபானக்கடையை திறந்து நடத்தி வருகிறார். இந்த மதுபானக்கடையால் அப்பகுதி பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதாவது கணவர்கள் வேலைக்கு செல்லாமல் மது அருந்துவது மற்றும் மதுபானக்கடை வழியாக நடந்து செல்லும் இளம்பெண்களை, குடிமகன்கள் சீண்டும் சம்பவங்களும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.  

இதனால் கிராம பெண்கள், மதுபானக்கடையை அகற்றக்கோரி கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் மதுபானக்கடையை அகற்றக்கோரி, மாவட்ட கலெக்டர் ரமேசிடம் மனு ஒன்றை கொடுத்து இருந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மதுபானக்கடை சூறையாடல்

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி முஸ்லாம்புரா கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், மதுபானக்கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கடையை அகற்றும்படி கோஷமிட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மதுபானக்கடை உரிமையாளர் மால்தேசும், ஊழியர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தி பெண்களை தாக்கினர். இதனால் 6 பெண்கள் காயம் அடைந்தனர். 

இதையடுத்து பெண்கள், அப்பகுதி இளைஞர்களுடன் ஒன்று திரண்டு மதுபானக்கடையை அடித்து நொறுக்கினர். மேலும் மதுபானக்கடையில் இருந்த நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்டவை சூறையாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கடூர் போலீசார் இருதரப்பு புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டின் ஓட்டை பிரித்து...

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மதுபானக் கடையை அடித்து நொறுக்கியதாக முஸ்லாம்புரா கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உள்பட 7 பெண்களை கைது செய்ய கடூர் போலீசார் வந்தனர்.

 அதன்படி கடூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையில் சம்பந்தப்பட்ட வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் போலீசார் கதவை தட்டுவதை அறிந்த பெண்கள் கதவை திறக்கவில்லை. நீண்டநேரமாகியும் கதவை திறக்காததால், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரம்யா வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று கைது செய்யும்படி உடன் வந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். 

 இதையடுத்து போலீசார், வீட்டின் மேற்கூரை மீது ஏறி ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கினர். இதனை எதிர்பாராத குடும்பத்தினர் திக்குமுக்காடி போகினர். இதைதொடர்ந்து போலீசார், ஒரு குடும்பத்தை சேர்ந்த சிறுமி, 6 பெண்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம மக்கள் குற்றச்சாட்டு

இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், இரவு நேரத்தில் பெண்கள் இருக்கும் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்து கைது செய்து போலீசார் அராஜகம் செய்கின்றனர். இது மனித உரிமை மீறலாகும். மதுபானக்கடை உரிமையாளரிடம், லஞ்சம் வாங்கிக்கொண்டு அவருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். இந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்போம் என்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story