‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 16 Nov 2021 10:33 AM IST (Updated: 16 Nov 2021 10:33 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி விரைவில் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிட்கோ ஜெ.ஜெ.நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியான செய்திக்கு திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.வெங்கட்ராகவன் அளித்துள்ள பதிலில், ‘ இந்த நீர்த்தேக்க தொட்டியில் நீர்கசிவு ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு குடிநீர் ஆதாரமாக புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. எனவே விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த தொட்டி கொண்டு வரப்படும்.’ என்று கூறியுள்ளார்.

தெருவை ஆக்கிரமிக்கும் கட்டிட கழிவுகள்



சென்னை பிராட்வே செம்புதாஸ் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி அருகே கட்டிட கழிவுகள், ரப்பீஸ் கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. சிங்கார சென்னை 2.0 என்ற மகத்தான திட்டத்தை மாநகராட்சி முன் எடுத்து வரும் வேளையில் இதுபோன்ற தேவையற்ற கழிவுகள் தெருக்களின் அழகை சீர்குலைப்பது போன்று இருக்கிறது. செம்புதாஸ் தெருவில் தேங்கி உள்ள தேவையற்ற கழிவுகளால் தெரு குறுகிப் போய் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

- குரேஷ் பகத், வணிகர்.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சென்னை புரசைவாக்கம் கரியப்பா தெருவில் மழைவெள்ள நீர் வடிந்து இயல்புநிலை திரும்பி வரும் வேளையில் கழிவுநீர் பிரச்சினை போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வியாபாரிகள், கரியப்பா தெரு.

குப்பை குவியல்

சென்னை சூளை ஏ.பி.சாலை முதல் தெருவில் மின்மாற்றி அமைந்துள்ள இடம் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மிகுந்த அசுத்தமாக காட்சி அளிக்கிறது. சுகாதார சீர்கேடு பிரச்சினை தலை தூக்கி உள்ளது. இந்த வழியாக செல்லும் போது மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் நிலைமை உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

-எஸ்.பொற்கொடி, சூளை.

மின் விளக்குகள் எரியவில்லை

சென்னை புழல் காவாங்கரை நீலகண்ட நகர் 2-வது தெருவில் உள்ள மின்விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இந்த தெருக்கள் இருள் சூழ்ந்து கிடக்கிறது. எனவே இரவு நேரத்தில் வெளியே சென்று வருவதற்கு தயக்கமாக உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் கவனிப்பார்களா?

-பொதுமக்கள், காவாங்கரை.

சாய்ந்த மின்கம்பம் நேராகுமா?

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் மேற்கு அவென்யூ 2-வது பிளாக் பகுதியில் உள்ள மின்கம்பம் சாய்ந்தவாறு இருக்கிறது. கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அச்சமாக உள்ளது. எனவே சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த மின்கம்பத்தை நேராக்கி தர வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

- பிரேம், கொடுங்கையூர்.

பள்ளி வகுப்பு அறையில் விரிசல்



செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் நெய்குப்பி ஊராட்சி ஆரம்பப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளியின் கட்டிட சுவர்கள் ஆங்காங்கே விரிசலுடன் காணப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடக்கூடாது. எனவே பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் களஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாய் சதீஷ், அணுபுரம் திருக்கழுக்குன்றம்.

நிரம்பிய கழிவுநீரால் அவதி

சென்னை தரமணி கம்பர் தெருவில் கழிவுநீர் வடிகால் நிரம்பி தெருவில் ஓடுகிறது. இப்பிரச்சினை கடந்த 10 நாட்களாக உள்ளது. இதனால் மிகுந்த இன்னல்கள் அடைகிறோம். எங்களுடைய சூழ்நிலையை உணர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.ரகுபதி, தரமணி.

தெருநாய்கள் தொல்லை

சென்னை நந்தனம் டர்ன்புல்ஸ் சாலை 3-வது குறுக்குத் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சிலர் நாய்க்கடிக்கு ஆளாகி உள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர்களை விடாமல் விரட்டுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.

- குமார், நந்தனம்.

மின் கம்பம் மாற்றப்படுமா?

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் உள்ள மின்கம்பம் சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து, உறுதித்தன்மையை இழந்தது போன்று உள்ளது. பலத்த காற்று வீசினால் இந்த கம்பம் தாக்கு பிடிக்காமல் கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

-அகரம் கிராம மக்கள்.

மாசடைந்த கோவில் குளம்

பூவிருந்தவல்லியை அடுத்த மேப்பூர் ஊராட்சியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவில் குளம் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதில் கழிவுநீர் கலந்து தற்போது தண்ணீர் மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?

-உதயவாணன், மேப்பூர்.

கழிவுநீர் அகற்றப்படுமா?



சென்னை மந்தைவெளி ராபர்ட்சன் தெருவில் மழைநீரில் கழிவுநீர் கலந்து சாலை முழுவதும் சூழ்ந்திருக்கிறது. இதனால் இந்த தெருவே சுகாதார சீர்கேட்டில் சிக்கி உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், ராபர்ட்சன் தெரு.

Next Story