காட்டுயானைகள் வழித்தடம் அழிக்கப்பட்டதா
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணியின்போது காட்டுயானைகள் வழித்தடம் அழிக்கப்பட்டதா? என்பது குறித்து கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி நேரில் ஆய்வு செய்தார்.
ஊட்டி
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணியின்போது காட்டுயானைகள் வழித்தடம் அழிக்கப்பட்டதா? என்பது குறித்து கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி நேரில் ஆய்வு செய்தார்.
யானைகள் நடமாட்டம்
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று வனத்துறை மூலம் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே அந்த சாலையில் ஒருசில வளைவுகள் குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்களை திருப்ப முடியாத நிலை இருந்தது. அந்த வளைவுகளை கண்டறிந்து விரிவுபடுத்தி தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இதன் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ராதாகிருஷ்ணன் பாலம் அருகே பழைய தடுப்புச்சுவர் அகற்றப்பட்டு, சாலையை விரிவுபடுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அந்த இடம் வழியாக காட்டுயானைகள் சென்று வருவதால், அவை இடம் மாறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு யானை வழித்தடம் அழிக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார். காட்டுயானைகள் கடந்து செல்வதற்கு இடையூறு இல்லாமல் சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வலதுபுறம் பாறை இருப்பதால், வாகனஙகள் இடதுபுறம் ஒதுங்கி செல்லும்போது விபத்தில் சிக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வன், குன்னூர் வனச்சரகர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பணி நிறுத்தம்
இதுகுறித்து கோட்ட பொறியாளர் செல்வன் கூறியதாவது:-
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறிப்பிட்ட இடம் குறுகலாக இருந்ததால் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காட்டுயானைகள் கடந்து செல்வதற்கு வசதியாக சிறிது இடம் விடப்பட்டு, நிலையான இடத்தை ஏற்படுத்தி அகலப்படுத்துவது குறித்து நீலகிரி வன கோட்ட அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி கிடைத்த பிறகு யானைகள் கடக்க வழிவிட்டு சாலை அகலப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது அங்கு சாலையை அகலப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story